அம்மா உணவகத்தில் அவியல் முட்டையுடன் இலவச உணவு.

அம்மா உணவகத்தில் அவியல் முட்டையுடன் இலவச உணவு.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரூ.1.50 லட்சம் நிதியுதவி



திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் அவியல் முட்டையுடன் இலவச உணவு அளிப்பதற்காக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ரூ.1.50 லட்சம் நிதியுதவி செய்தார்.


ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து உணவுடன் முட்டை, பழங்களும் சேர்த்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவு திட்டத்துக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காசோலையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.


ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளதாகவும், இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.


திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் கிருமி நாசினி மருந்தை தனது சொந்த செலவில் வழங்கியதாகவும், தனது தொகுதி உட்பட அனைத்து பகுதிகளுக்கும் தினமும் சென்று தூய்மை பணிகளை தொடர்ந்து நேரில் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிடுவதாக தெரிவித்தார்.


இதனிடையே மதிய வேளையில் மட்டும் அவித்த முட்டை ஒன்று உணவுடன் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் எம்.பி. குமார் பல லட்ச ரூபாய் வரை இதுவரை நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts